ஈரோடு நர்ஸ் கொலையில் திருப்பம்... உல்லாசமாக இருந்த பின், நகைக்காக கொன்றதாக மருத்துவமனை ஊழியர் வாக்குமூலம்!
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே 26 வயது செவிலியரைக் கொலை செய்துவிட்டு அவரது தாலிச் சங்கிலியைத் திருடிய வழக்கில், சக மருத்துவமனை ஊழியரான 23 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் உத்ரா. வழக்கம் போல இவரின் கணவர் ரஞ்சித்குமார் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் மாலையில் அழைத்துச் செல்லச் சென்ற போது, உத்ரா ஏற்கனவே வீட்டிற்குப் புறப்பட்டு விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உத்ரா வீடு திரும்பாததால், உத்துக்குளி காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த அக்டோபர் 17ம் தேதியன்று பெருந்துறை காவல் எல்லைக்குட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள பொன் கைலாஷ் நகரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அது காணாமல் போன செவிலியர் உத்ராவுடையது என உறுதிசெய்யப்பட்டு, கொலை வழக்காக மாற்றப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இக்கொலைத் தொடர்பாக உத்ராவுடன் பணியாற்றிய சக ஊழியரான எம். சரவணன் (23) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

திருப்பூர் மருத்துவமனையில் பணியாற்றிய போது உத்ராவுக்கும் சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சரவணனுக்கு வேறு இடத்திற்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி பெருந்துறைக்கு வந்த உத்ராவை, சரவணன் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இருவரும் பைக்கில் விஜயமங்கலம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது, உத்ராவின் நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் அவரது துப்பட்டாவைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். கொலையை அரங்கேற்றிய பின் உத்ராவின் கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து சரவணன் தப்பியோடியுள்ளார்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் மூலம் குற்றவாளி சரவணன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
