ஈரோடு டூ சென்னை.. தமிழகத்தில் அமித்ஷா அதிரடி - ஒரே நாளில் இரு தொகுதிகளில் மெகா பிரச்சாரம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேசியத் தலைவர்களின் வருகையால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (ஏப். 19) ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சின்னமலை சிலை வரை பிரம்மாண்ட 'ரோடு ஷோ' (Road Show) மூலம் அவர் வலம் வருகிறார். மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா-வை ஆதரித்து, தாமரை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.

ஈரோடு பயணத்தை முடித்துக்கொண்டு கோவை வழியாகச் சென்னை வரும் அமித்ஷா, மாலை மயிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார். அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தலைநகர் சென்னையில் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ல் முடிவடைவதால், ஏப்ரல் 23-ல் தேர்தல் நடத்தப்பட்டு மே 4-ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யப் பிரதமர் மோடிக்குப் பிறகு அமித்ஷாவின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
