ஈரோட்டில் மஞ்சள் விலை கிடுகிடு உயர்வு… குவிண்டால் ரூ.20,799!

 
மஞ்சள்

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ.20,799-க்கு ஏலம் போனது. இதன் மூலம் மஞ்சள் விலை ரூ.21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மஞ்சள்

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மழை குறைவு மற்றும் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காத காரணங்களால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மஞ்சள் சாகுபடி பாதியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவும் விவசாயிகளிடம் உள்ள பழைய மஞ்சள் இருப்பும் குறைந்துள்ளன.

கடந்த மாதத் தொடக்கத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், படிப்படியாக விலை உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி ரூ.17,969-க்கு விற்பனையான மஞ்சள், சமீபத்திய ஏலத்தில் ரூ.20,799 வரை உயர்ந்தது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குவிண்டாலுக்கு சுமார் ரூ.2,800 விலை அதிகரித்துள்ளது.

மஞ்சள்

விரலி, கிழங்கு மஞ்சள் விலை விவரம்

ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் குறைந்தபட்சம் ரூ.19,419-க்கும் அதிகபட்சம் ரூ.20,799-க்கும் விற்பனையானது. கிழங்கு மஞ்சள் ரூ.17,849 முதல் ரூ.19,011 வரை விலை போனது.

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையம் ஆகியவற்றுக்கு மொத்தம் 2,425 மூட்டை மஞ்சள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் 1,435 மூட்டைகள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.