எருமைகளை மேய்த்த சிறுமி கலெக்டராகி சாதனை - ஈரோடு வான்மதி IASன் இன்ஸ்பிரேஷன் பயணம்!
வறுமையையும் பல்வேறு கடுமையான சவால்களையும் எதிர்த்துப் போராடி, எருமைகளை மேய்த்த சிறுவயதிலிருந்து மகாராஷ்டிராவின் மாவட்ட ஆட்சியர் பதவரை உயர்ந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி. வான்மதி ஐ.ஏ.எஸ்.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்மையன்புதூர் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் டி.என். சென்னியப்பன் மற்றும் சுப்புலட்சுமி தம்பதியினரின் மகளாவார் வான்மதி. மிகவும் ஏழ்மையான குடும்பச் சூழலில் வளர்ந்தவர். தனது கல்விச் செலவைத் தானே சமாளிக்க பள்ளிப் பருவத்தில் எருமைகளை வளர்த்து, மேய்த்து, புல் சேகரித்து, பாலை விற்று வந்த பணத்தைக் கொண்டு தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார்.

பிளஸ் டூ காலத்தில் திருமணம் செய்து கொள்ள வந்த அழுத்தங்களை எதிர்த்துப் போராடி, கோயம்புத்தூரில் கணினி பயன்பாட்டியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்தார். பின்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராகவும் பணியாற்றினார்.
தொலைக்காட்சித் தொடரில் பார்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தாக்கம் இவருக்குள் சிவில் சர்வீஸ் கனவை விதைத்தது. நேர்காணலுக்குச் சில நாட்களுக்கு முன்பு தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட போதிலும், அத்தனை அழுத்தங்களையும் தாண்டி 2014-ஆம் ஆண்டு UPSC தேர்வில் 152-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.
மகாராஷ்டிரா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வான்மதி, நந்துர்பார் மற்றும் துலே போன்ற பகுதிகளில் பணியாற்றியதைத் தொடர்ந்து, வார்தா மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று மக்களுக்கான நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.
