மதுக்கடையை மாற்ற நீங்களே இடம் பாருங்க... கலெக்டர் பேச்சால் கிராம மக்கள் அதிர்ச்சி

 
erode erode

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முளியனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பூதப்பாடி மற்றும் பூனாச்சி ஆகிய அருகில் உள்ள கிராமங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், அங்கிருந்த மதுப்பிரியர்கள் அனைவரும் தற்பொழுது முளியனூர் கிராமத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பெரும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

tasmac

மதுக்கடையினால் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 பேரை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடையினால் ஏற்படும் பல்வேறு சமூகச் சிக்கல்களை மக்கள் அவரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

tasmac

ஆனால், பேச்சுவார்த்தையின் போது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்த கருத்துக்கள் அங்கிருந்தவர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மதுக்கடையை உடனடியாக மூட முடியாது என்றும், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால் அதற்குரிய மாற்று இடத்தை கிராம மக்களாகிய நீங்களேதான் பார்த்துத் தர வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் கிராமத்தில் உள்ள ஆண்கள் குடிப்பதை நிறுத்திவிட்டால் வருமானம் இன்றி இந்த கடை தானாகவே மூடிவிடும் என்றும் அவர் விசித்திரமான பதிலை அளித்தார். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், இன்னும் ஒரு வாரத்திற்குள் கடையை மூடாவிட்டால் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.