எரிபொருள் செலவைக் குறைக்க களமிறங்கும் புதிய எத்தனால் வாகனங்கள்!
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக உள்நாட்டிலேயே எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாருதி சுசுகி நிறுவனம் நாட்டின் முதல் பலவகை எரிபொருள் வாகனத்தை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
புதிய வாகனங்களின் அறிமுக விழாவில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது அவர் பேசுகையில், முதற்கட்டமாக டெல்லி, புனே, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய முக்கிய நகரங்களில் 50 முதல் 100 எத்தனால் எரிபொருள் நிலையங்களை அமைத்து இந்த திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார். இதன் மூலம் வாகன ஓட்டிகள் எளிதாக மாற்று எரிபொருளைப் பயன்படுத்த முடியும்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் இந்த எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையை வரும் காலங்களில் பெரிய அளவில் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 5,000 எத்தனால் எரிபொருள் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு நுகர்வோரின் எரிபொருள் செலவையும் கணிசமாகக் குறைக்கும்.
