வாகன ஓட்டிகளுக்கு திடீர் சலுகை... எத்தனால் கலந்த பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.90 வரை குறைய வாய்ப்பு!

 
எத்தனால் எத்தனால்

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் தேவையைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும் மத்திய அரசு தற்பொழுது ஒரு புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, 20 சதவீதத்திற்கு மேல் எத்தனால் கலந்து தயாரிக்கப்படும் பிரத்யேக எரிபொருட்களுக்கான கலால் வரியை மத்திய அரசு தற்பொழுது முற்றிலும் நீக்கி உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி வரி விலக்கு முடிவானது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி 22%, 25%, 27% மற்றும் 30% வரை எத்தனால் கலக்கப்பட்டுச் சந்தைக்கு வரும் பெட்ரோல் வகைகளுக்கான கலால் வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, சந்தையில் தற்பொழுது விற்கப்பட்டு வரும் எத்தனால் கலந்த E30 ரக பெட்ரோலின் விலையானது வரும் நாட்களில் படிப்படியாகக் குறையப் பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பாக, 30% வரை எத்தனால் கலந்து தயாரிக்கப்படும் உயர் ரக பெட்ரோலின் விலையானது, இந்த மாபெரும் கலால் வரி நீக்கத்தின் காரணமாக லிட்டருக்கு சுமார் ரூ.11.90 வரை விறுவிறுவெனக் குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசின் இந்தச் சமயோசிதமான சலுகை நடவடிக்கையால், பெட்ரோல் விலை உயர்வால் அன்றாடம் தவித்து வரும் சாமானிய நடுத்தர வாகன ஓட்டிகளுக்கு இனி வரும் நாட்களில் மிகப்பெரிய நிம்மதியும் பெரும் பணச் சேமிப்பும் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.