மின்னல் தாக்கிய காதலன்… இருமுறை சிபிஆர் அளித்து உயிரைக் காப்பாற்றிய காதலி!
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வனப்பகுதியில் நடைப்பயணம் சென்றபோது மின்னல் தாக்கிய காதலனை, ஈவா ப்ரோடெரிக் தனது துரித செயலால் காப்பாற்றியுள்ளார். நிக் ப்ரோடெரிக் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, ஈவா இருமுறை சிபிஆர் முதலுதவி அளித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் பாதிப்பு
நிக் மற்றும் ஈவா நடைப்பயணம் சென்றபோது திடீரென புயல் ஏற்பட்டது. பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்றபோது மின்னல் தாக்கியதில் இருவரும் பாதிக்கப்பட்டனர். நிக் சுயநினைவை இழந்து சுவாசமின்றிக் கிடந்தார்.
இருமுறை முதலுதவி
ஈவா உடனடியாக நிக்குக்கு சிபிஆர் முதலுதவி அளித்தார். அவரது இதயத் துடிப்பு மீண்டும் நின்றபோதும், ஈவா இரண்டாவது முறையாக முதலுதவி அளித்தார். பின்னர் மீட்புக் குழுவினர் நிக்கை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.
பின்னர் நிக், ஈவாவைத் திருமணம் செய்துகொண்டார். இக்கட்டான சூழலில் காதலனின் உயிரைக் காப்பாற்ற ஈவா மேற்கொண்ட முயற்சிக்காக அவருக்குத் துணிச்சல் விருது வழங்கப்பட்டது.
