‘அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்தாலும் தவெகவில் சேர்க்க மாட்டோம்!’ - அமைச்சர் நிர்மல்குமார்

 
நிர்மல்குமார்

"திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் எத்தனை காலம் தவமிருந்தாலும் அவரைத் தவெகவில் சேர்க்க மாட்டோம்" என அமைச்சர் சி.டி. நிர்மல்குமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தவெக அரசு மீது அனிதா ராதாகிருஷ்ணன் சுமத்திய 'ஒட்டக பேர'க் குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நள்ளிரவில் ஜாமீனில் வெளிவந்த திமுகவின் மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன், "என்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணையுமாறு வற்புறுத்தினார்கள்; தமிழகத்தில் நடப்பது ஒட்டக பேரம்" எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

இதற்குத் தவெக தரப்பில் இருந்து முதன்முறையாகப் பதிலளித்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சர் குறித்துப் பொதுவெளியில் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது."

"அவர் மீது போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமே அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததால்தான், காவல்துறையினர் அவரை முறைப்படி கைது செய்தனர். இதில் எவ்வித அரசியல் பழிவாங்கும் நோக்கமும் இல்லை."

அனிதா

தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனின் கட்சித் தாவல் புகாரை முற்றிலுமாக நிராகரித்த அமைச்சர், தவெக-வின் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்தார். "அவரைத் தவெக-வில் இணையச் சொல்லி நாங்கள் பேரம் பேசியதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான, அடிப்படையற்ற குற்றச்சாட்டு. அனிதா ராதாகிருஷ்ணன் இனி என்னதான் தவமிருந்தாலும், தலைகீழாக நின்றாலும் அவரை எங்களது கட்சியில் சேர்க்கும் எண்ணம் எள்ளளவும் இந்தத் தலைமைக்கு இல்லை" என குறிப்பிட்டார்.