“என்னை மண்ணில் புதைச்சாலும் என் திட்டங்களை யாராலும் புதைக்க முடியாது!” - ஸ்டாலின் ஆவேசம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இடையிலான வார்த்தைப் போர் முற்றியுள்ளது. இன்று செங்கல்பட்டு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கடுமையாக விமர்சித்ததோடு, தனது அரசியல் எதிர்காலம் மற்றும் மக்கள் திட்டங்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
"இந்த உலகத்தில் மரணத்தைச் சந்திக்காத மனிதரே இல்லை. ஒருநாள் எனக்கும் மரணம் வரும், என்னையும் மண்ணில் புதைப்பார்கள். ஆனால் நான் சவால் விட்டுச் சொல்கிறேன், இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் மக்கள் நலத் திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கும் வராது."

"மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் மக்கள் மனதில் இருக்கும் வரை, ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான். எடப்பாடி பழனிசாமி எனது கைகள் மண்ணுக்குள் போக வேண்டும் எனப் பேசுகிறார். ஆனால் மக்கள் பயனடையும் வரை என் பணிகள் நிற்காது" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், திமுக அறிவித்துள்ள 8,000 ரூபாய் கூப்பன் திட்டம் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எங்களின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலின் 'சூப்பர் ஸ்டார்' என்று பெருமிதம் கொண்டார்.

இந்தியாவிலேயே தமிழகத்தைத் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளோம். அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செங்கல்பட்டும், காஞ்சியும் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வெள்ளம் பாதித்தபோது நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் தான் அதிமுகவினர். கொரோனா காலத்தில் மக்களுக்கு ஹெல்ப் லைன் அமைத்து களத்தில் நின்றது திமுக தான். பழனிசாமிக்கு வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாபங்கள் எங்களை ஒன்றும் செய்யாது. என் இறுதி மூச்சு வரை தமிழ்நாட்டுக்காக உழைப்பேன் என உறுதியளித்தார்.
எடப்பாடி பழனிசாமி தனது பேச்சைக் குறித்துப் பொய் சொல்லி வருவதாகவும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகக் களத்தில் நிற்பது திமுக மட்டுமே என்றும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
