"ரூ.100 கோடி கொடுத்தாலும் வரமாட்டேன்".. திமுக பேரம்... தவெக எம்எல்ஏ வெளியிட்ட ஆடியோ ஆதாரம்!
திமுகவில் இணைவதற்காகத் தன்னிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகப் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன், தற்பொழுது அந்தப் பேரத்தின் போது தான் பேசிய அதிர்வலைகளைக் கிளப்பும் ஆடியோ உரையாடலையும் ஊடகங்களிடம் பகிரங்கமாக ஒப்படைத்துள்ளார்.
எம்எல்ஏ சரவணன் வெளியிட்டுள்ள அந்த ஆடியோ பதிவில், குதிரைப்பேரத்தில் ஈடுபட முயன்ற நபரிடம் அவர் மிக ஆக்ரோஷமாகவும், உறுதியாகவும் மறுத்துப் பேசும் விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

தவெகவில் இருந்து விலகப் பணம் தருவதாக ஆசை காட்டிய நபரிடம், "நீங்கள் ரூ.50 கோடி அல்ல, ரூ.100 கோடி தூக்கிக் கொடுத்தாலும் நான் மாற்று முகாமிற்கு வரமாட்டேன்" என்று சரவணன் மிகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். "நான் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டேன். கடைசி மூச்சு இருக்கும் வரை எனது தலைமைக்கு (முதலமைச்சர் விஜய்) உண்மையாக மட்டுமே இருப்பேன்" என்று அவர் அந்த உரையாடலில் மிகவும் ஆணித்தரமாகப் பேசியுள்ளார்.
மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, கடந்த 25 நாட்களுக்கு முன்பு எப்போதும்வென்றான் அருகே காரில் சென்ற போது தன் மீது லாரியை ஏற்றி விபத்து மூலம் கொல்ல முயன்றார்கள் என்று சரவணன் அடுத்தடுத்து பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

இத்தகைய இக்கட்டான சூழலிலும், கோடி கோடியாகப் பணத்தை நீட்டியவர்களிடம் "தலைமைக்குத் துரோகம் செய்ய மாட்டேன்" என்று அவர் பேசியுள்ள ஆடியோ உரையாடல் தற்பொழுது தவெக தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆடியோ தடையங்களின் அடிப்படையில் போலீசார் தங்களது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
