’“உசுரே போனாலும் அதிமுகவில் தான் இருப்பேன்...” வதந்திகளுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் முற்றுப்புள்ளி!
தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்களது தாய் கட்சிகளில் இருந்து விலகி, ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்து வரும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தவெக-வில் இணைய உள்ளதாகப் பரவிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்தத் தகவல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெக-வில் இணைவது குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று சாடியுள்ள அவர், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து, "எந்தவொரு அரசியல் சூழல் வந்தாலும், எனது வாழ்நாளின் இறுதிவரை நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே நீடிப்பேன். எனது உயிர் போகும் நிலை வந்தாலும், நான் நேசிக்கும் இயக்கத்தை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன்" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தனக்கு என்றுமே 'இரட்டை இலை' சின்னம் தான் அடையாளம் என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தங்களைக் வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தனக்கு எல்லாம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாகத் தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை உள்ளிட்ட சில தொகுதிகளின் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டத்தின் வலுவான அதிமுக தலைவர்களில் ஒருவரான காமராஜ் குறித்தும் இத்தகைய வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
காமராஜின் இந்த அதிரடி மற்றும் தெளிவான அறிவிப்பு, டெல்டா பகுதி அதிமுக தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்த குழப்பத்தைத் தீர்த்து, அவர்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அதே வேளையில், கட்சித் தாவல் வதந்திகளுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறி வதந்தி பரப்புவோர் மீது அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
