'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை'.. டாக்டர் கிருஷ்ணசாமி

 
கிருஷ்ணசாமி

தமிழகச் சட்டமன்றத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக ஒருமனதாகத் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், அதற்குப் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கே.கிருஷ்ணசாமி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதைத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பழமொழி ஒன்றைக் குறிப்பிட்டு அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் பதிவில் டாக்டர் கிருஷ்ணசாமி , "'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து ஏதேனும் ஒரு புதிய பிரச்சினையைத் திட்டமிட்டு எழுப்பிக் கொண்டே இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படும் அவர்களின் இந்த பிடிவாத போக்கு கண்டிக்கத்தக்கது."

காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் ஆகியவை காவிரி நீர் பங்கீடு குறித்துப் பல தெளிவான மற்றும் இறுதியான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இந்த சட்டப்பூர்வ தீர்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையைக் கட்ட முயலும் கர்நாடக அரசின் தற்போதைய முயற்சி சட்டவிரோதமானது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் பறிக்கும் இந்த திட்டத்திற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள கண்டனத் தீர்மானத்தைப் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் முழுமனதோடு வரவேற்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி தனது பதிவில் உறுதியளித்துள்ளார். தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.