“என் ரத்தமே எனக்கு விஷமானாலும், தொண்டர்களே மருந்தாவார்கள்!” - டாக்டர் ராமதாஸ்!

 
 ராமதாஸ், அன்புமணி  ராமதாஸ், அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப் போர், தற்போது தனிப்பட்ட தாக்குதல்களாக மாறியுள்ளது. அன்புமணி ராமதாஸ் குறித்த டாக்டர் ராமதாஸின் சமீபத்திய அறிக்கை பாட்டாளித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு பாமக-வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும் (ஐயா பாமக), அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும் இயங்கி வருகின்றன. “எப்போது அன்புமணி பணத்திற்காக அலையத் தொடங்கினாரோ, அன்றே ஒரு தந்தையாக நான் இறந்துவிட்டேன்” என ராமதாஸ் தனது அறிக்கையில் மிகுந்த மனவருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ்

தான் இத்தனை ஆண்டுகளாகச் சிந்திய ரத்தத்தையும், வளர்த்தெடுத்த கொள்கைகளையும் அன்புமணி வெறும் ‘சமூக நீதி வியாபாரமாக’ மாற்றிவிட்டார் என அவர் சாடியுள்ளார். தற்போது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கட்சியின் சின்னமான ‘மாம்பழம்’ யாருக்கு என்பதில் உச்ச நீதிமன்றம் வரை போராட்டம் நீடித்தது.

தற்போது அன்புமணி தலைமையிலான அணிக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு 'கேஸ் சிலிண்டர்' சின்னத்தில் போட்டியிடுகிறது. “எனது ரத்தமே எனக்கு விஷமாக மாறினாலும், எனது உண்மைத் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பார்கள்” என அவர் தனது ஆதரவாளர்களுக்குத் தைரியம் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் பாமக

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்தப் பகிரங்க மோதல் வட தமிழகத் தொகுதிகளில் பாமக-வின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.