அதிமுக மாஜி எம்எல்ஏ நில மோசடி! ரூ.50 லட்சம் சொத்தை அபேஸ் செய்ய போலி ஆவணங்கள்!
திருப்பூரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக அபகரித்த புகாரில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் கச்சேரி வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் குறிஞ்சிவேந்தன், கடந்த 2008-ம் ஆண்டு காளிபாளையம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தில் தனக்கு 10 சென்ட் இடம் இருப்பதாகக் கூறி, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், உண்மை என்னவென்று கண்டறிய குறிஞ்சிவேந்தன் களமிறங்கினார்.
விசாரணையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி, செல்வராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து மெகா மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோன நிலத்தின் உரிமையாளர் தங்கவேல் மற்றும் அவரது வாரிசுகள் உயிருடன் இருப்பதாகக் கூறி, கால்நடை மருத்துவர் சுரேஷ்குமாரிடம் இருந்து போலி சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்த போலி ஆவணங்களைக் கொண்டு, தாராபுரம் சார்பதிவாளர் கண்ணன் ஒத்துழைப்புடன் கடந்த 2018-ல் சட்டவிரோத பத்திரப்பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த போலி பத்திரப்பதிவு விவகாரம் வெளியே தெரிந்ததையடுத்து, முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமியின் மனைவியும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான சத்தியபாமா, குறிஞ்சிவேந்தன் வீட்டிற்குச் சென்று மிரட்டல் விடுத்துள்ளார். "புகார் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 2026 தேர்தலில் நான்தான் வேட்பாளர், என்னை பகைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டேன்" என மிரட்டியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குறிஞ்சிவேந்தன் அளித்த புகாரைத் தொடர்ந்து, தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி, அவரது மனைவி சத்தியபாமா, போலி ஆவணம் தயாரித்த செல்வராஜ், போலி சான்று வழங்கிய மருத்துவர் சுரேஷ்குமார் மற்றும் மோசடிக்குத் துணையாக இருந்த சார்பதிவாளர் கண்ணன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நில மோசடியில் மக்கள் பிரதிநிதிகளே கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
