அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ படத்திற்குச் செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்கட்சி நிர்வாகிகளிடம் தவெக-வின் வளர்ச்சியைப் பற்றிக் கவலை தெரிவித்துப் பேசிய சில மணி நேரங்களிலேயே, நீலகிரி மாவட்ட அதிமுகவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து விலகி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள கூடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெய்சீலனுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் வீதியில் இறங்கி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியிலிருந்து கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2026-ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் பொன் ஜெய்சீலன். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவின் கூடலூர் பகுதி முக்கிய முகமாக இருந்த பொன் ஜெய்சீலன், திடீரென அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, இன்று சென்னை பனையூரில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்று வரும் இணைப்பு விழாவில் அவர் தவெக-வில் ஐக்கியமாகியுள்ளார்.
கூடலூர் தொகுதியின் முக்கியத் தலைவராக வலம் வந்த பொன் ஜெய்சீலன், தங்களைக் கலந்தாலோசிக்காமல் தவெக-விற்குத் தாவியதால் நீலகிரி மாவட்ட மற்றும் கூடலூர் நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். பொன் ஜெய்சீலனின் துரோகத்தைக் கண்டிப்பதாகக் கூறி, கூடலூர் நகரின் மிக முக்கியப் பொதுச் சந்திப்புப் பகுதியில் திரண்ட நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள், அவரது உருவப் புகைப்படத்தைக் கைகளில் ஏந்தி தவெக அரசுக்கும், பொன் ஜெய்சீலனுக்கும் எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதிமுக தொண்டர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெய்சீலனின் புகைப்படத்திற்கு நடுரோட்டில் செருப்பு மாலை அணிவித்து, அதனைத் தடிகளால் அடித்துத் தங்களது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ-வின் படத்திற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட தகவல் கூடலூர் பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், அங்குள்ள தவெக தொண்டர்களும் பதிலடி கொடுக்கத் திரண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் நகரப் போlலீசார், செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட படத்தைப் பறிமுதல் செய்து போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் செய்தனர். மேலும், சட்டம் ஒழுங்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் கூடலூர் நகரின் முக்கியப் சந்திப்புகள் மற்றும் தவெக - அதிமுக அலுவலகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
