நாளை வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்... மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த முடிவுகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாகத் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான கையோடு, உயர்கல்விக்கான சேர்க்கை பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றித் துணிச்சலுடன் முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களும் மனநல ஆலோசகர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.