கொடூரம்... தேர்வில் பெயிலானதால் திட்டிய தாயை கொன்ற மகன்!
சென்னை பெருங்குடி பகுதியில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவனை அவரது தாய் கண்டித்து அறிவுரை கூறியுள்ளார். சரியாகப் படிக்காமல் தேர்வில் கவனம் செலுத்தாதது குறித்தும், எதிர்கால வாழ்க்கை குறித்தும் தாய் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் பெற்ற தாய்க்கும் மகனுக்கும் இடையே வீட்டில் கடும் வாக்குவாதமும் மனக்கசப்பும் ஏற்பட்டுள்ளது. தாயின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த மகன் மனதினுள் பெருங்கோபத்தையும் வஞ்சத்தையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ளான்.

நள்ளிரவு நேரத்தில் தந்தை வீட்டில் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்த தாய் மீது மகன் பாய்ந்துள்ளான். ஆத்திரத்தில் தாயின் கழுத்தை நெரித்தவன், வீட்டில் இருந்த கத்தியால் குத்தியும் கல்லால் அடித்தும் கொடூரமாகக் கொன்றுள்ளான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்ற தாயைக் கொடூரமாகக் கொலை செய்த மகனைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்த இளைஞர் கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயையே மகன் அடித்துக் கொன்ற இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
