பாஜக முன்னாள் எம்எல்ஏ கல்லால் அடித்துக் கொலை - வெறித்தனமாக தாக்கிய கிராம மக்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பவுண்டா கிராமத்தில் நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கல் உடைக்கும் சுரங்கப் பணிகள் தொடர்பாக ஏற்பட்ட கடும் மோதலில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அத்தார் சிங் கிராம மக்களால் நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பவுண்டா கிராமத்தில் நீண்ட காலமாகவே நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த கல் உடைக்கும் சுரங்கப் பணிகள் குறித்த சர்ச்சைகள் நிலவி வந்தன. இப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களைக் கருத்தில் கொண்டு மூடப்பட்டிருந்த கல் உடைக்கும் ஆலையை மீண்டும் திறப்பதற்குச் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலையை மீண்டும் திறப்பதன் மூலம் தங்களது வாழ்வாதாரம், கிராமத்தின் அமைதி மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் தீவிரமாகக் கவலை தெரிவித்து வந்தனர். இது தொடர்பாகத் தொடர் எதிர்ப்புகளும், உள்ளூர் மக்களிடையே அதிருப்தியும் நிலவி வந்த சூழலில், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
மூடப்பட்டிருந்த ஆலையை மீண்டும் இயக்கும் முயற்சியில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவான அத்தார் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது, அதனை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களை வலுக்கட்டயமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்ற அத்தார் சிங்கும் அவரது தரப்பினரும் முயன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது விபரீத மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றுதிரண்டு அத்தார் சிங் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் கிராம மக்களால் கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கப்பட்டு அத்தார் சிங் படுகாயமடைந்தார்.
கடும் கும்பல் தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அத்தார் சிங்கை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர மருத்துவர்கள் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அத்தார் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். முன்னாள் எம்எல்ஏ கொலை செய்யப்பட்டதைக்தைத் தொடர்ந்து பவுண்டா கிராமத்தில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத சுரங்கப் பணிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
