சமூக வலைதளத்தில் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் காதலன் - திருமணம் நின்றதால் இளம்பெண் தற்கொலை!
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, முன்னாள் காதலன் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் திருமணம் நின்றுபோன அதிர்ச்சியில் மணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்சிப்புளி அருகே உள்ள மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்த சரிதாவுக்கும் (22), பிரம்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கும் முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் லோகேஷின் செயல்பாடு பிடிக்காமல் சரிதா அவரிடமிருந்து விலகியதை அடுத்து, பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயித்தனர்.

இவர்களது திருமணம் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், ஆத்திரமடைந்த லோகேஷ் சரிதாவுடன் முன்பு எடுத்த நெருக்கமான புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படங்கள் மணமகன் வீட்டாரைச் சென்றடைந்ததால் அவர்கள் திருமணத்தை உடனடியாக நிறுத்தினர். இதனால் ஏற்பட்ட அவமானம் மற்றும் மன உளைச்சலால் விரக்தியடைந்த சரிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவலறிந்து வந்த உச்சிப்புளி காவல்துறையினர் சரிதாவின் உடலைக் கைப்பற்ற முயன்ற போது, காதலன் லோகேஷை உடனடியாகக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள லோகேஷைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
