மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய முன்னாள் காதலன்... வெட்டிக்கொன்றுப் புதைத்த புதுமாப்பிள்ளை... நண்பரால் வெளியான அதிர்ச்சி தகவல்!

 
கொலை புதுமாப்பிள்ளை கொலை புதுமாப்பிள்ளை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, தனது மனைவிக்குத் தொடர்ச்சியாக ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பித் தொல்லை கொடுத்து வந்த அவரது முன்னாள் காதலனை, புதுமாப்பிள்ளை ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து, உடலை வீட்டின் அருகிலேயே புதைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலை தொடர்பாகப் புதுமாப்பிள்ளையைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் புறநகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த வேலாயுதம்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (22), கூலித்தொழிலாளி. இவரும், சிறுமலையில் உள்ள கடமான்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த சில காலமாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், இருவரையும் கண்டித்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணிற்கு அய்யலூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (24) என்ற வாலிபருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவசரமாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பின் புதுமணத் தம்பதியினர் சிறுமலையில் வசித்து வந்தனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

திருமணம் முடிந்த பிறகும், அரவிந்தன் அந்தப் பெண்ணின் நடத்தையில் விளையாடும் விதமாக அவரது செல்போனுக்குத் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும், அவதூறாகப் பேசியும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

"எனக்குத் திருமணமாகி விட்டது, இனிமேல் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்" என அந்தப் பெண் எச்சரித்தும் அரவிந்தன் கேட்பதாக இல்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், இது குறித்துத் தனது கணவர் வீரமணியிடம் அழுது கொண்டே புகாரளித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த வீரமணி, அரவிந்தனைப் பழிவாங்கத் துணிந்தார். தனது மனைவியின் செல்போன் மூலமாகவே, அரவிந்தனுக்குச் சாதகமாகப் பேசுவது போல் நடித்து, அவரைச் சிறுமலைக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!!

காதலியே கூப்பிடுகிறார் என்ற எண்ணத்தில், கடந்த ஜூன் 14-ஆம் தேதி அரவிந்தன் சிறுமலையில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த வீரமணி, அரவிந்தனை வழிமறித்து, "திருமணத்திற்குப் பிறகும் என் மனைவிக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பி ஏன் தொல்லை கொடுக்கிறாய்?" எனக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற வீரமணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அரவிந்தனைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலையை மறைப்பதற்காக வீரமணி, தனது வீட்டின் அருகிலேயே ஒரு சிறிய பள்ளத்தைத் தோண்டி, அதில் அரவிந்தனின் உடலைத் தூக்கிப் போட்டுப் புதைத்துள்ளார். மேலும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அந்தப் பள்ளத்தின் மீது பெருமளவில் குப்பைகளைக் கொட்டி மறைத்துள்ளார். கொலை செய்துவிட்டுத் தப்பிவிடலாம் என எண்ணிய வீரமணி, நேற்று முன்தினம் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இந்த விபரத்தைக் கூறிப் புலம்பியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நண்பர், உடனே கிராமத்தின் முக்கியப் பெரியவர்களிடம் விபரத்தைக் கொண்டு சேர்த்தார்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் புறநகர் போலீசார், குப்பைகளை அகற்றிப் புதைக்கப்பட்டிருந்த அரவிந்தனின் அழுகிய உடலைக் கைப்பற்றினர். பின்னர் உடல் பாகங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்க முயன்ற புதுமாப்பிள்ளை வீரமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.