அதிகக் கட்டண வசூல்... சவீதா மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழக அரசு வலியுறுத்தல்!

 
அருண்ராஜ்

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்திலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரி நிர்வாகம், எம்பிபிஎஸ் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததுடன் வருகைப்பதிவு இணையதளத்தை முடக்கியுள்ள விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில், எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத்தைப் பரிந்துரைக்கப்பட்ட கல்விக் காலமான நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், சவீதா மருத்துவக் கல்லூரியில் 2022-ஆம் ஆண்டில் சேர்ந்து தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களிடம், முழு ஆண்டிற்கான கல்விக் கட்டணமாக ரூ.24,75,000 செலுத்தக் கல்லூரி நிர்வாகம் கோரியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு மீறி முழு ஆண்டிற்கான கட்டணம் கோரப்பட்டதும், அதைக் செலுத்தாத மாணவர்களின் வருகைப்பதிவு இணையதளம் கடந்த செப்டம்பர் 30 முதல் முடக்கப்பட்டதும் மாணவர்களும் பெற்றோர்களும் அளித்த புகாரின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்புகார் குறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்ட மூன்று அலுவலர்கள் கொண்ட குழுவினர் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதியன்று விசாரணை நடத்தினர். இதில் 17 மாணவர்களும் 7 பெற்றோரும் பங்கேற்றுப் புகாரை உறுதிப்படுத்தினர். ஆனால், விசாரணைக்கு அழைக்கப்பட்ட கல்லூரி நிர்வாகம் தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

சவீதா மருத்துவக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அங்கம் என்பதால் இது மாநிலக் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் வரம்பிற்குள் வராது என்பதால், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரம்பிற்கு உட்பட்டது.

இச்சம்பவம் குறித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,  தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்குத் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்து வரும் சவீதா மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ஐந்தாம் ஆண்டுக்கு ஆண்டுக் கட்டணத்தில் பாதி மட்டுமே வசூலிக்க உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.

மாணவர்களின் வருகைப்பதிவு இணையதளத்தை உடனடியாக மீண்டும் திறக்கச் செய்வதோடு, கூடுதல் கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக எந்த மாணவருக்கும் வருகைப்பதிவு, மருத்துவப் பயிற்சிப் பணி மற்றும் தேர்வு எழுதும் தகுதி ஆகியவை மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது அடுத்த கட்டணத்துடன் சரிசெய்யவோ உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.

புகார் அளித்ததற்காகவோ விசாரணையில் பங்கேற்றதற்காகவோ எந்த மாணவர் அல்லது பெற்றோருக்கும் கல்லூரியால் பாதகமான விளைவுகள் ஏற்படாமல் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டண விவகாரத்தால் எந்தவொரு மாணவரின் மருத்துவப் படிப்பும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு எனவும், கல்லூரி நிர்வாகத்தின் மீதான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.