முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை... பெரும் பரபரப்பு!

 
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தன்னாங்குடியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் என்பவர் மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் தனது மனைவியைப் பள்ளியில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய அவரை இந்த கொடூரத் தாக்குதல் காவு வாங்கியுள்ளது. பாக்குடி பெரிய குடும்பம்பட்டி தார் சாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

வழக்கம்போல் தனது மனைவியைப் பள்ளியில் விட்டுவிட்டுத் தனித் தனியாகத் திரும்பி வந்துகொண்டிருந்த நாகராஜை   வழிமறித்துத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பாக்குடி கவரச்சி குளக்கரை தார் சாலை நடுவே பல வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தவரைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ந்து போய் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த இலுப்பூர் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நிலத் தகராறு அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்தச் கொடூரக் கொலை அரங்கேறியதா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுச் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.