உஷார்... ₹32.71 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கல் - பிளிங்கிட் கிடங்கு உரிமம் ரத்து!

 
பிளிங்கிட்

மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் இயங்கி வந்த பிரபல ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான பிளிங்கிட்டின் சேமிப்புக் கிடங்கில், ₹32.71 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதன் உரிமத்தை மகாராஷ்டிர உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மகாராஷ்டிர உணவுப் பாதுகாப்புத்துறை கமிஷனர் துக்காராம் முண்டே ஐ.ஏ.எஸ் தலைமையிலான அதிகாரிகள் பிவண்டியில் உள்ள பிளிங்கிட் கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையின் போது விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான மற்றும் சேதமடைந்த 18,405 உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு ₹32.71 லட்சம் ஆகும்.

மளிகைப் பொருட்கள் விலைவாசி உயர்வு

உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி காலாவதியான பொருட்களை அழிக்காமல் பதுக்கி வைத்திருந்ததால், அக்கிடங்கின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பொருட்களை வேறு இடங்களுக்கு மாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோதக் காலாவதியான பொருட்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜொமாட்டோ போன்ற முன்னணி நிறுவனங்களின் கிடங்குகளிலும் இதேபோன்று முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிங்கிட் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.