ஆப்கானிஸ்தான் பள்ளியில் வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; 90 மாணவர்கள் படுகாயம்!
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாகாணத் தலைநகர் அசாதாபாத் புறநகரில் உள்ள அந்தர் செர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாகாணத் தகவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 15 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
