சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து... தரைமட்டமானது அறை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு கட்டிடம் முற்றிலுமாகத் தரைமட்டமானது. உணவு இடைவேளை நேரம் என்பதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரம் பகுதியில் 'வாரி பட்டாசு ஆலை' செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இன்று மதியம் ஆலையின் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் உராய்வு காரணமாகத் திடீரென வெடித்துச் சிதறின. இந்த விபத்தின் வீரியத்தில் அந்த அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.
விபத்து நடந்த நேரத்தில் தொழிலாளர்கள் அனைவரும் மதிய உணவு இடைவேளைக்காக அறையை விட்டு வெளியே சென்றிருந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
