"காங்கிரஸின் துரோகத்தை தோலுரித்துக் காட்டுங்கள்" - செய்தி தொடர்பாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 
முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசிய விபரங்கள் கசிந்துள்ளன.

ஊடக விவாதங்களில் கட்சியின் நிலைப்பாட்டை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து, செய்தி தொடர்பாளர்களுக்கு அவர் வழங்கிய ஆலோசனைகள் அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், கூட்டணிக் கட்சிகளை எதிர்கொள்வது குறித்து செய்தி தொடர்பாளர்களுக்குப் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

"கடந்த கால நிகழ்வுகள் மற்றும் அரசியல் நகர்வுகளில் காங்கிரஸின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. எனவே, ஊடக விவாதங்களின் போது காங்கிரஸின் துரோகத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும்" என மு.க.ஸ்டாலின் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை, அவர்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் திமுக மீது அவர்கள் வைக்கும் விமர்சனங்களின் தன்மையைப் பொறுத்து, அதற்குத் தகுந்தவாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் தவெக ஆட்சி நிர்வாகம் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது அமைந்துள்ள தவெக அரசின் குறைகள் மற்றும் அவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகள் எவை என்பதை மிகத் துல்லியமாக ஆராய்ந்து, அவற்றை ஊடக விவாதங்கள் மற்றும் பொது மேடைகளில் மக்கள் மத்தியில் அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும் என்று செய்தி தொடர்பாளர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களம் புதிய கூட்டணிக் கணக்குகள் மற்றும் விவாதங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், செய்தி தொடர்பாளர்கள் கூட்டத்தில் திமுக தலைமை எடுத்துள்ள இந்த கடுமையான நிலைப்பாடு, வரும் நாட்களில் ஊடக விவாதங்களை மேலும் சூடாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.