பயணிகள் கனிவான கவனத்திற்கு... சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

 
எக்ஸ்பிரஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்

தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் சென்னை சென்டிரல் மற்றும் பெங்களூரு இடையே இயக்கப்படும் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் திடீர் மாற்றத்தால் வார இறுதி மற்றும் கோடை விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தண்டவாளப் பராமரிப்புப் பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் புக்கிங்

அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து அசோகபுரம் செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் (16021) வரும் ஜூன் 3 முதல் ஜூலை 6 வரையிலான சில முக்கிய தேதிகளில் இயங்காது. இதேபோல் மறுமார்க்கத்தில் அசோகபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலும் (16022) குறிப்பிட்ட நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர பெங்களூரு மெயில் ரயிலும் (12657, 12658) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சுமார் 12 நாட்கள் இயக்கப்பட மாட்டாது.

ரயில்

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஜூன் 4, 5, 10, 22 மற்றும் ஜூலை 3, 6 உள்ளிட்ட பல தேதிகள் இடம் பெற்றுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தேதிகள் குறித்து முழுமையான விவரங்களைத் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகள் சரிபார்த்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்த பயணிகளுக்குக் கட்டணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.