எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் டீசல் கசிவு... நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் டீசல் கசிவு ஏற்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், இது குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்களின் அறிவுரையின்படி அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடி ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் காலை 8 மணிக்கு அவசரமாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரயிலில் இருந்த பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் இந்தத் தகவல் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கி, ஆவடியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயில்களில் ஏறித் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் என மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், டீசல் கசிவு ஏற்பட்ட பெட்டியில் இருந்து டீசலை பைப் மூலமாகப் பேரல்களில் நிரப்பிப் பழுதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 10.50 மணிக்குச் சென்னை எழும்பூர் ரயில்வே பணிமனைக்கு முழுமையாகக் கொண்டு செல்லப்பட்டது. இந்தத் திடீர் டீசல் கசிவு மற்றும் ரயில் நிறுத்தம் காரணமாக ஆவடி ரயில் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.