Facebook-ல் இனி வீடியோக்களுக்கு முன்னுரிமை! Meta எடுத்த புதிய முடிவு!

 
பேஸ்புக்

 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் பேஸ்புக் செயலியில் வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மெட்டா நிறுவனம் புதிய மாற்றத்தைச் சோதித்து வருகிறது. குறிப்பாக, ரீல்ஸ் போன்ற குறுகிய வீடியோக்கள் மீதான பயனர்களின் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக்கின் முகப்புப் பக்க அனுபவத்தை வீடியோவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாற்றும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தப் புதிய மாற்றத்தின்படி, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சில பயனர்கள் பேஸ்புக் செயலியைத் திறக்கும்போது வழக்கமான பதிவுகளுக்குப் பதிலாக முழுத்திரையில் வீடியோக்களை முதலில் பார்க்கும் வகையில் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு ஏற்ற அனுபவத்தை வழங்க மெட்டா திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றம் தற்போது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களிடம் சோதனை செய்யப்படுகிறது. அனைத்து பயனர்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை. மேலும், வீடியோக்களை முதலில் பார்க்க விரும்பாதவர்கள் வழக்கமான நியூஸ் ஃபீடு முறைக்குத் திரும்பும் வசதியும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் புதிய வீடியோக்களை ரீல்ஸ் வடிவில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மெட்டா மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, செயலியைத் திறந்ததும் வீடியோக்கள் முதன்மையாகத் தோன்றும் அனுபவத்தை அறிமுகப்படுத்துவது குறித்து நிறுவனம் சோதித்து வருகிறது.

Facebook Tests 'Immersive' Full-Screen Reels 10/07/2026

இந்த மாற்றம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பேஸ்புக்கில் செய்தி நிறுவனங்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பிற பக்கங்கள் வெளியிடும் வீடியோக்களைப் பயனர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதில் மாற்றம் ஏற்படலாம். இருப்பினும், வீடியோவுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய வடிவம் அனைத்து பயனர்களுக்கும் எப்போது விரிவுபடுத்தப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.