செம மாஸ்... இனி கூகுள் தேவையில்ல... முகநூலில் ஏஐ வசதி... பயனர்கள் உற்சாகம்!

 
facebook

கூகுள் தனது தேடல் தளத்தில் தகவல்களைத் திரட்டிப் பயனர்களின் கேள்விகளுக்கு ஏற்பப் பதில்களை வழங்குவதைப் போன்று, முகநூல் நிறுவனமும் தங்களின் தளத்தில் புதிய செய்யறிவு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மெட்டா ஏஐ வசதியின் மூலம் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவுகள், குழு விவாதங்கள் மற்றும் ரீல்ஸ் விடியோக்களின் தகவல்களைத் திரட்டித் துல்லியமான பதில்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற இனி முகநூல் செயலியை விட்டு வெளியேறி மற்ற இணையப் பக்கங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

முகநூலில் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஏஐ அடிப்படையிலான தேடல் வசதியைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களின் கேள்விகளை உள்ளீடு செய்து முகநூல் தளத்திலேயே சுலபமாகப் பதில்களைப் பெற முடியும். பயனர்களின் கேள்விகளுக்கு வெறும் இணையதள லிங்குகளை மட்டும் காட்டாமல், அந்தத் தகவல்களை யார் பதிவிட்டார்கள் என்பதை முதற்கொண்டு முகநூல் ஏஐ தெளிவாகக் காட்டும். இதன் மூலம் பயனர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் உண்மையானதா என்பதை எளிதாக உறுதிப்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Facebook's new AI Mode search gets its info from public posts

இத்துடன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எடிட் செய்து பதிவேற்றம் செய்வதற்கும் புதிதாகப் பல்வேறு ஏஐ டூல் அம்சங்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர்கள் தங்களின் நண்பர்களுக்கு அதீத எண்ணிக்கையில் உள்ள புகைப்படங்களைக் கொலாஜ் செய்து, அழகான விடியோக்களாக மாற்றி எளிமையாகப் பகிர முடியும். முகநூல் பயனர்களின் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் செய்யறிவுத் தொழில்நுட்ப வசதி இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.