FACT CHECK: ஆம்புலன்சில் இருந்து நோயாளி தவறி விழுந்ததாக பீதியைக் கிளப்பிய வீடியோ: உண்மை இல்லை!

 
ஆம்புலன்ஸ்

கோவை அவினாசி சாலையில் ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி தவறி விழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. இந்த வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதி நீங்கியது.

விபத்துக்களில் சிக்கியவர்களையும், உயிருக்குப் போராடும் நோயாளிகளையும் ‘பொன்னான நேரத்தில்’ (Golden Hours) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் உயிர்காக்கும் வாகனமாக ஆம்புலன்ஸ்கள் விளங்குகின்றன. இதன் முக்கியத்துவம் கருதியே, ஆம்புலன்ஸ் வந்தால் சாலையில் உள்ள அனைவரும் உடனடியாக வழிவிடுகின்றனர்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆம்புலன்ஸ் குறித்து சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வந்தது. அந்த காணொளியில், ஆம்புலன்ஸ் ஒன்று சாலையின் வழியே அதிவேகமாகச் செல்கிறது. அப்போது, அதன் பின்பக்கக் கதவு திடீரெனத் திறந்து கொள்கிறது. அடுத்த நொடியே, நோயாளி ஒருவர் சிகிச்சைப் படுக்கையுடன் (Stretcher) சாலையில் தலைகீழாக விழுவது போல அந்தக் காட்சி இருந்தது.

இந்த அதிர்ச்சி காணொளியைப் பரப்பியவர்கள், அது கோவை மாவட்டம் அவினாசி சாலை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், "கோவையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தை எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாது" என்றும் கிண்டல் தொனியில் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் உண்மை என்று நம்பி, அதிர்ச்சியடைந்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, இது தமிழகம் முழுவதும் பேசுபொருளானது.

ஆம்புலன்ஸ்

சமூக வலைதளங்களில் இந்தப் பீதியைக் கிளப்பிய வீடியோ குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில், ஆம்புலன்ஸிலிருந்து நோயாளி தவறி விழுந்தது போன்ற சம்பவம் கோவையில் மட்டுமல்ல, வேறு எந்த இடத்திலும் நடக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

காவல்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வில், வைரலான இந்தக் காணொளி, உண்மைச் சம்பவம் இல்லை என்பதும், முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, யாரோ விஷமிகள் உருவாக்கிய போலிக் காணொளி என்பதும் தெரியவந்தது. மேலும், வீடியோவில் காண்பிக்கப்படும் இடம் கோவை அவினாசி சாலையே இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

ஆம்புலன்ஸ்

இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், சிலர் அதன் தவறான பயன்பாட்டை மேற்கொண்டு, இது போன்ற போலியான வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், அரசு இயந்திரத்தின் மீது அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. இதுபோன்று உண்மைக்கு மாறான, போலியான வீடியோக்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறையின் தெளிவான விளக்கத்திற்குப் பிறகு, கோவையில் ஆம்புலன்ஸிலிருந்து நோயாளி தவறி விழுந்ததாகப் பரவிய பீதி முடிவுக்கு வந்துள்ளது.