FACT CHECK: 1.1 லட்சம் கோடி தங்கம் விற்பனையா... ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ விளக்கம்!
இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் இருந்த சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி முற்றிலும் அப்பட்டமான வதந்தி என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளன.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்துவதற்காகவும், சர்வதேசப் பொருளாதாரச் சமநிலையைச் சமாளிப்பதற்காகவும் ரிசர்வ் வங்கி இந்த தங்கம் விற்பனை முடிவை எடுத்ததாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது பொதுமக்களிடையே நிதி சார்ந்த தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திய சூழலில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல் வாரியமான பிரஸ் இன்பர்மேஷன் பீரோ இந்தச் செய்தியைத் தீர ஆய்வு செய்து விளக்கம் அளித்துள்ளது.

"இந்திய ரிசர்வ் வங்கி 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப்புறம்பானது. நாட்டின் தங்கக் கையிருப்பு பாதுகாப்பாக உள்ளது" எனப் பி.ஐ.பி தனது உண்மை கண்டறியும் பிரிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தரப்பில், இந்தியாவின் பொருளாதாரக் குறியீடுகள் மற்றும் நிதி மேலாண்மை மிகவும் வலுவான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அவ்வப்போது தனது சொத்துக்கள் மற்றும் சர்வதேசக் கையிருப்புகளை முறைப்படி மறுமதிப்பீடு செய்யுமே தவிர, நாட்டின் பொருளாதாரத்திற்குத் தங்கம் போன்ற அத்தியாவசிய சொத்துக்களை விற்கும் எந்தவொரு நெருக்கடி நிலையிலும் இந்தியா இல்லை. எனவே, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இதுபோன்ற ஆதாரமற்ற பொருளாதார வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
