லாரி பின்னால் மோதிய கார்: போலி சாமியாரின் உதவியாளர் மனைவியுடன் விபத்தில் பலி!

 
நாசிக் நாசிக்


மராட்டிய மாநிலத்தில் போலி சாமியாராக வலம் வந்த அசோக் காரத்தின் நெருங்கிய உதவியாளர் ஜிதேந்திர ஷெல்கே, சாலை விபத்தில் தனது மனைவியுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத், ஜோதிடர் என்று கூறி பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நிழல் உலகத் தொழில்களில் வலதுகரமாகச் செயல்பட்டு வந்தவர் தான் இந்த ஜிதேந்திர ஷெல்கே என்பது குறிப்பிடத்தக்கது.

நாசிக்

சம்பவத்தன்று ஷெல்கே தனது மனைவி அனுராதா மற்றும் 14 வயது மகன் சுஜித் ஆகியோருடன் காரில் பயணம் செய்துள்ளார். இவர்களது கார் அகல்யாநகர் மாவட்டத்தின் கொபர்காவன் பகுதியில் சென்றபோது, முன்னால் மெதுவாகச் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியதுடன், காரை ஓட்டிச் சென்ற ஷெல்கே சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார். அவரது மனைவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த ஷெல்கேவின் மகன் சுஜித், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப்போராடி வருகிறார். உயிரிழந்த ஷெல்கே, போலி சாமியார் காரத்தின் தொழில் கூட்டாளியாகவும், அவர் நடத்தி வந்த அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். சிறையில் உள்ள சாமியாரின் முக்கிய ரகசியங்கள் தெரிந்த உதவியாளர் திடீரென விபத்தில் பலியானது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.