பகீர் வீடியோ.. தோழிகள் கண்முன்னே நீர்வீழ்ச்சியில் குளித்த இளம்பெண் பலி - சடலம் மீட்பு!
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான ரோபோ ஹாராவ் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, சுற்றுலாப் பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவிற்குச் சுற்றுலா சென்றிருந்த விண்டி ரஹ்மா புத்ரி (25) என்ற இளம்பெண், கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று தனது தோழிகளுடன் சேர்ந்து ரோபோ ஹாராவ் நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை அழகை ரசித்தவாறே அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விண்டி ரஹ்மா புத்ரி நிலை தடுமாறிப் பாறைகளில் வழுக்கி நீரோட்டத்தில் விழுந்துள்ளார். அங்கு ஆர்ப்பரித்துக்கொட்டிய வேகமான நீரோட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள், அவரை உடனடியாகக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. சில வினாடிகளிலேயே அந்தப் பெண் தண்ணீருக்கு அடியில் மூழ்கி மாயமானார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக அப்பகுதி அதிகாரிகளுக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் நீர்வீழ்ச்சிப் பகுதியில் தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை அன்று விண்டி ரஹ்மா புத்ரியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. தோழிகள் கண்முன்னே சுற்றுலா சென்ற இளம்பெண் நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
