பகீர் வீடியோ... ஓடும் ரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் கடலில் குதித்த இளைஞர் சாவு; இளம்பெண் படுகாயம்!
பிரசித்தி பெற்ற பாம்பன் கடல் பாலத்தைக் கடந்த இரண்டு நாட்களில் ரயிலில் இருந்து கடலில் குதித்த அடுத்தடுத்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பயணிகளின் பாதுகாப்பு குறித்த தீவிரக் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
கடந்த சனிக்கிழமை இரவு ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பாம்பன் பாலத்தைக் கடந்தபோது, அதிலிருந்த இளைஞர் ஒருவர் திடீரெனக் கடலில் குதித்தார். தகவலறிந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, நேற்று காலை முள்ளிமுனைத் தீவு கடற்கரையில் அந்த இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர் குறித்த விவரங்களை ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பன் பாலத்தைக் கடந்தபோது, மற்றொரு பெண் பயணியும் திடீரெனக் கடலில் குதித்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற ரயில்வே காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான குழுவினர், கடலில் தத்தளித்த அப்பெண்ணை உயிருடன் மீட்டனர்.
கடலில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், முதலுதவிக்குப் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மீட்கப்படும்போது அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததால், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என்ற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. அவரது உடல்நிலை சீரான பின்னரே முழுமையான விசாரணை நடத்தப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் கடல் பாலத்தைக் கடக்கும்போது சிலர் விழிப்புணர்வின்றிச் செயல்படுவதும், செல்ஃபி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதும் அவ்வப்போது விபத்துகளுக்கு வழிவகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
