கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி?! - முதல்வர் விஜய் அதிரடி!
கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாகக் காலமான 41 பேரின் குடும்பத்தினருக்கு, தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான விரிவான ஆயத்தப் பணிகளைத் தவெக அரசு தற்பொழுது முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரின் வேலுசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெகவின் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அச்சமயம் தவெக தலைவராக இருந்த விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது சொந்த நிதியிலிருந்து தலா ₹20 லட்சம் நிதியுதவியை உடனடியாக வழங்கி, அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்த ஏற்பாடு செய்திருந்தார். தற்பொழுது இச்சம்பவம் குறித்துச் சிபிஐ விசாரணை ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாகக் காக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் பின்னணிகள் குறித்துக் கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ரகசியமாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டு வந்தன:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள தகுதியான நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, அரசுத் துறைகள் அல்லது அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், கணினி தட்டச்சர் அல்லது தகுதிக்கேற்ற இதரப் பணியிடங்களை வழங்குவது குறித்து இறுதிப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்காகத் தமிழக அரசின் பொதுத்துறையின் மூலம் சிறப்பு அரசாணை ஒன்று விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்கள் வரும் ஜூலை 22 வரை திட்டமிடப்பட்டுள்ள போதிலும், இடையில் ஒரு முக்கியப் பயணமாக முதலமைச்சர் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு நேரில் செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு நடைபெறும் அரசு விழாவில், பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து, அவர்களுக்குரிய அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் பரப்புரையில் நேரிட்ட துயரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசுப் பொறுப்பேற்ற பிறகு அதிகாரப்பூர்வமாக வாழ்வாதாரத்தை உறுதி செய்யத் தவெக அரசு எடுத்துள்ள இந்த முடிவு கரூர் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
