1,700 அடி உயர மலையிலிருந்து குதித்து அரசு ஊழியர் தற்கொலை - இறுதி வீடியோவால் பரபரப்பு!

 
தற்கொலை

குஜராத்தைச் சேர்ந்த தபால் துறை ஊழியர் ஒருவர், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள 1,700 அடி உயர மலைப் பகுதியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட 13 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த விஸ்வராஜ்சிங் கோஹில் என்பவர், தபால் துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் தாராபா சர்வெயா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி அவரது மனைவி காவல் நிலையத்தில் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைப் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அக்டோபர் 9-ஆம் தேதி கோஹிலும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 'கொம்கண்கடா' என்ற 1,700 அடி ஆழமான மலைப் பகுதிக்குச் சென்ற அவர், அங்கிருந்து குதித்துத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். மலையின் அடிவாரத்தில் அவரது மோட்டார் சைக்கிளும் கைப்பேசியும் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சுமார் 1,700 அடி ஆழமான பள்ளத்தாக்கு என்பதால், ட்ரோன் கேமராக்கள் மற்றும் மலை ஏறுதல் வீரர்களின் உதவியுடன் 24 மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு விஸ்வராஜ்சிங் கோஹில் பதிவு செய்த 13 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில் அவர், தம்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட புகார்கள் முற்றிலும் பொய்யானவை. பெண்கள் மற்றும் குடும்பத்தினரைப் பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்கள், சில வேளைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, கணவன்மார்களுக்கு எதிராகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராகவும் கடுமையான மன மற்றும் பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இத்தகைய சட்ட நடைமுறைகளில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.