பிரபல நடிகர் சந்தோஷ் கே. நாயர் சாலை விபத்தில் பலி... திரையுலகினர் கடும் அதிர்ச்சி!
மலையாளத் திரைப்பட உலகின் மூத்த நடிகரான சந்தோஷ் கேசவன் நாயர் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் தனது 65 ஆவது வயதில் உயிரிழந்தார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய ‘இது நங்களுடே கதா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ், வில்லன், கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர் எனப் பல்வேறு கோணங்களில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இவருடன் காரில் பயணித்த அவரது மனைவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மறைவுச் செய்தி கேட்ட மலையாளத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். திறமையான ஒரு கலைஞர் சாலை விபத்தில் உயிரிழந்தது கேரள கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
