பாஜகவில் இணைந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் - ஓபிசி பிரிவு சிறப்பு அழைப்பாளராக நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக அவரை நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் களத்தில் பல சாதனைகளைப் படைத்த சாஹல், தற்போது அரசியல் பயணத்தையும் தொடங்கியிருப்பது விளையாட்டு மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
பாஜகவின் ஓபிசி பிரிவு செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக யுஸ்வேந்திர சாஹலை நியமிப்பதாகத் தேசியத் தலைவர் நிதின் நபின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கட்சியில் இணைவதற்கு முன்னதாக, பாஜக ஓபிசி அணியின் தேசியத் தலைவரும் மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினருமான அமர் பால் மவுரியாவை சாஹல் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இளம் தலைமுறையினர் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த விஷயங்களில் அவரது பங்களிப்பு கட்சியின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
36 வயதான யுஸ்வேந்திர சாஹல், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த 2023 ஆகஸ்ட் 13-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அவர் கடைசியாக விளையாடினார். அதன்பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் காத்திருக்கிறார். இதற்கிடையில், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் அண்மையில் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த யுஸ்வேந்திர சாஹல், பாஜகவில் இணைந்து ஓபிசி பிரிவில் முக்கியப் பொறுப்பை ஏற்றிருப்பது குறித்துக் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. விளையாட்டுத் துறையில் தனது அனுபவத்தையும், சமூக அளவிலான தொடர்புகளையும் கொண்டு அவர் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
