அதிர்ச்சியில் இசை உலகம்... பிரபல பாடகர் டிலன் கார்ட்டர் விபத்தில் அகால மரணம்!
உலகப்புகழ் பெற்ற 'தி வாய்ஸ்' பாடல் போட்டித் தொடரின் 24-வது சீசனில் பங்கேற்று நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்ற இளம் இசைக்கலைஞர் டிலன் கார்ட்டர் கார் விபத்தில் உயிரிழந்தார். தெற்கு கரோலினாவின் கோலெட்டன் கவுண்டியில் கடந்த சனிக்கிழமை நடந்த இந்த கோர விபத்து அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது 24-வது வயதிலேயே அவர் உயிரிழந்த செய்தி கேட்டு இசைத்துறையினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தென் கரோலினா நெடுஞ்சாலை ரோந்துப் படையைச் சேர்ந்த அதிகாரி நிக் பை அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். டிலன் கார்ட்டர் தனது காரில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிச் சென்றுள்ளது. அதிவேகத்தில் சென்ற கார் அங்குள்ள மின்கம்பம் மற்றும் வேலியில் பயங்கரமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த டிலன் கார்ட்டர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் தனது இறுதி மூச்சை விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நான்கு நடுவர்களின் பார்வைகளையும் தன் வசீகரிக்கும் குரலால் கவர்ந்த ஒரு இளம் நட்சத்திரம், தனது வாழ்வின் தொடக்கத்திலேயே விபத்தில் சிக்கி மறைந்தது இசை உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
