ரசிகர்கள் அதிர்ச்சி... இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் திடீர் விலகல்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையும், வெற்றிகரமான கேப்டனுமான ஹர்மன்ப்ரீத் கவுர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2016 முதல் டி20 அணியையும், மித்தாலி ராஜின் ஓய்வுக்குப் பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளையும் சேர்த்து மூன்று வடிவங்களிலும் இந்திய மகளிர் அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் வெற்றிகரமாக வழிநடத்தினார். இவரது தலைமையில் இந்தியா 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் மற்றும் மகளிர் ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 200 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ள இவர், ஒட்டுமொத்தமாக 211 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக முன்னின்று நடத்திச் சென்றுள்ளார். 37 வயதான ஹர்மன்ப்ரீத் கவுர், இதுவரை 8 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 205 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 9,191 ரன்களைக் குவித்துள்ளார்.
பிசிசிஐ ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு தனது முடிவை அறிவித்துள்ள அவர், "இது எளிதான முடிவு அல்ல. நமது அணி தற்போது சிறந்த இடத்தில் உள்ளது என்ற நம்பிக்கையுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். கிரிக்கெட் மீதான எனது பயணம் தொடர்ந்து தொடரும்" எனத் தமது சமூக வலைதளப் பக்கத்தில் உணர்வுபூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ஒரு சகாப்தத்தின் கேப்டன் பதவி முடிவுற்றிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
