ரசிகர்கள் அதிர்ச்சி... இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ராவத் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு!

 
பூனம் ராவத்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் தொடக்க வீராங்கனை பூனம் ராவத், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 12 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான பூனம் ராவத், 12 ஆண்டுகளுக்கும் மேலாகச் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்துள்ளார். இவர் கடைசியாக 2021 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,299 ரன்களையும், 35 டி20 போட்டிகளில் 719 ரன்களையும், 4 டெஸ்ட் போட்டிகளில் 264 ரன்களையும் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 4 சதங்களை விளாசியுள்ள இவர் (ஒருநாள் போட்டிகளில் 3, டெஸ்டில் 1), 19 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார்.

2017 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. அந்தத் தொடரில் 381 ரன்கள் குவித்த அவர், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 86 ரன்கள் விளாசிப் போராடினார்.

இதே 2017 உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 109 ரன்கள் குவித்த பூனம் ராவத், தீப்தி சர்மாவுடன் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு வரலாற்றுச் சாதனையாக 320 ரன்கள் கூட்டணி அமைத்து அசத்தினார். 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க்-பால் (Pink-ball Test) டெஸ்ட் போட்டியில், நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும், பந்து பேட்டில் பட்டதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு தானாகவே வெளியேறி உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றார்.

மகளிர் ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்

தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மும்பை தெருக்களில் விளையாடத் தொடங்கி இந்திய அணியின் சீருடையை அணிந்தது வரையிலான இந்தப் பயணம் ஒரு வரம். இந்தியாவுக்காக விளையாடியது வெறும் கனவு மட்டுமல்ல, பெருமையுடன் நான் சுமந்த ஒரு பெரும் பாக்கியம். கிரிக்கெட் எனக்கு ஒரு தொழிலை மட்டும் தரவில்லை, முகவரியையும், ஒரு குடும்பத்தையும் தந்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.