விஜய்யைப் பார்க்க தென்னை மரத்தில் ஏறிய ரசிகர்கள் ... பெரும் பரபரப்பு!

 
thennai thennai

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 20) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவரை நேரில் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மணிக்கணக்காக ஆவலுடன் காத்திருந்தனர். பனையூர் இல்லத்தில் இருந்து கிளம்பிய விஜய்க்கு செல்லும் வழியெங்கும் ரசிகர்கள் பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது. விஜய்யை இன்னும் நெருக்கமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ரசிகர்கள் சிலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த உயரமான தென்னை மரங்களின் மீது ஏறி நின்றனர். மரத்தின் உச்சாணிக் கிளையில் அமர்ந்தபடி அவர்கள் செய்த அலப்பறையைக் கண்டு கீழே நின்றிருந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர். மின் கம்பிகளுக்கு அருகிலும், ஆட்டம் காணும் மரக் கிளைகளிலும் அவர்கள் நின்றிருந்த காட்சி அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மரத்தின் மேல் ஏறிய ரசிகர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களை உடனடியாகக் கீழே இறங்குமாறு எச்சரித்தனர். ஒலிபெருக்கி மூலம் பலமுறை அறிவுறுத்தியும், அவர்கள் கீழே இறங்காமல் அடம் பிடித்தது அதிகாரிகளைத் திணறடித்தது. "தலைவா நீ வாழ்க" என்று கோஷமிட்டபடி ஆபத்தான நிலையில் ரசிகர்கள் செய்த இந்த செயல், பிரசாரக் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்த பிறகே அவர்கள் மெதுவாகக் கீழே இறங்கி வந்தனர்.