“நான் உயிருடன் இருக்கிறேன்... இறப்பு சான்றிதழ் கொடுங்கள்!” கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விநோத மனு!
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் தனது பெயர் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், உயிருடன் இருக்கும் தனக்கு இறப்பு சான்றிதழ் வழங்குமாறு விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் கே.ஜி. ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (47). விவசாயக் கூலியான இவர், கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தந்தை ஆனந்தன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது தனது தந்தையின் பெயருடன் சேர்த்து ரேஷன் அட்டையில் இருந்த தனது பெயரும் அதிகாரிகளால் நீக்கப்பட்டதாக காந்தி கூறியுள்ளார். இதனால் கடந்த 18 மாதங்களாக ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.ரேஷன் அட்டையில் தனது பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே காந்தியின் மகன்களான பூவரசன் மற்றும் பேரரசன் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவப் பணிக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது, ரேஷன் அட்டையில் தந்தையின் பெயர் இல்லாததால் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காந்தி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய அவர், ரேஷன் அட்டையில் தனது பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும். இல்லையெனில், உயிருடன் இருக்கும் தனக்கு இறப்பு சான்றிதழையாவது வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ரேஷன் அட்டையில் பெயர் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட நிர்வாகச் சிக்கலுக்கு தீர்வு கோரி விவசாயி ஒருவர் இவ்வாறு விநோதமான கோரிக்கையை முன்வைத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
