விவசாயிகள் அதிர்ச்சி... இன்றுடன் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

 
ஒரே நாளில் இத்தனை உயரமா? வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை!!

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேட்டூர் அணைச் சேமிப்பிலிருந்து கடந்த மாதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டமிட்ட நாட்களின்படி இன்றுடன்முழுமையாக நிறுத்தப்படுகிறது. அணையின் நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், கடைமடை பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளும் வடகிழக்குப் பருவமழையின் மீதான எதிர்பார்ப்புகளும் தற்போது எழுந்துள்ளன.

வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய பருவமழை கைகொடுக்காத காரணத்தாலும், அணையின் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததாலும் பாசனம் குறித்த நிச்சயமற்ற சூழல் நிலவி வந்தது.

இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குக் குறுகிய காலத் திட்டமாக 45 நாட்களுக்குத் தண்ணீரைத் திறந்து வைத்தார். ஆரம்பக் கட்டத்தில் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 15,000 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.

மேட்டூர் டெல்டா ஏக்கர் குறுவை நெல் சாகுபடி விவசாயம் விவசாயி

அணைக்குத் தேவையான அளவு நீர்வரத்து இல்லாதபோதிலும், பாசனத்திற்காகத் தொடர்ச்சியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் வேகமாகக் குறைந்து வந்தது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி 91 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தொடர் திறப்பு காரணமாக நேற்றைய நிலவரப்படி 59.13 அடியாகக் குறைந்துள்ளது. அதாவது, கடந்த 44 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 32 அடி வரை சரிவைக் கண்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு வெறும் 696 கனஅடியாகக் குறைந்துள்ள நிலையில், பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் 45 வது நாள் இன்று நிறைவடைவதால், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவது இன்றுடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுகிறது.

மேட்டூர்

அதேநேரத்தில், காவிரி டெல்டா பாசனத்தின் கடைமடைப் பகுதிகளில் உள்ள சில வயல்வெளிகளுக்கு இன்னும் முழுமையான தண்ணீர் தேவைப்படுவதால், பாசனத்திற்குத் தண்ணீரைத் தொடர்ந்து திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பருவமழை தீவிரமடைந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.