கதறும் விவசாயிகள்... கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!
டெல்டா மாவட்டங்களில் புதிய நெல் கொள்முதல் பருவம் தொடங்கியுள்ள போதிலும், போக்குவரத்து ஒப்பந்தத்தில் நிலவும் ஏகபோக ஆதிக்கத்தால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களிலிருந்து கிடங்குகளுக்கு நெல் ஏற்றிச் செல்வதற்கான மாநில அளவிலான லாரி இயக்க ஒப்பந்தத்தை மன்னார்குடியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெற்றுள்ளார். முறையான வாகனங்கள் இல்லாத அவர், உள்கான்ட்ராக்ட் மூலம் லாரிகளை இயக்குவதால் போக்குவரத்துப் பணிகள் தாமதமடைவதாகக் கூறப்படுகிறது.

லாரி உரிமையாளர்கள் கேட்கும் கூடுதல் தொகையைக் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் வழங்காமல், தங்களின் தலையில் கட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. இதனால் முந்தைய நெல் மூட்டைகள் முழுமையாக அகற்றும் வரை புதிய நெல்லைக் கொள்முதல் செய்ய முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில அளவிலான ஏகபோக ஒப்பந்த முறையை உடனடியாக ரத்து செய்துவிட்டு, மாவட்ட வாரியாக டெண்டர் கோர வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளிடம் உள்ள சொந்த டிராக்டர்களைப் பயன்படுத்தி வாடகைக்கு நெல் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் போக்குவரத்துத் தாமதமும் தவிர்க்கப்படும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, இதுகுறித்துத் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், தற்போது போக்குவரத்துப் பணிகள் வேகம் பெற்றுள்ளதால் அடுத்த வாரத்திற்குள் நிலைமை முழுவதும் சீராகும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
