கம்பம் பள்ளத்தாக்கில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

 
கம்பம் சின்ன வெங்காயம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதிகளான குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் காய்கறிகள் தடையின்றி சாகுபடி செய்யப்படுகின்றன.

சின்ன வெங்காயம்

முல்லைப்பெரியாறு பாசன நீரைப் பயன்படுத்திச் சாகுபடி செய்யப்படுவதால், இங்கு விளையும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தனித்துவமான சுவையுடனும், உயர் தரத்துடனும் காணப்படுகின்றன. இதனால் சந்தைகளில் இவற்றுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.

உப்புக்கோட்டை பகுதியில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விதை, உரம், ஆட்கள் கூலி எனச் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. பயிரிட்ட 70 முதல் 80 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் சின்ன வெங்காயம், தற்போது சந்தையில் கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம்

நல்ல விளைச்சலுடன் சந்தையில் நல்ல விலையும் கிடைத்து வருவதால், நடப்பு பருவத்தில் தங்களுக்குக் கைநிறைய லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.