“விவசாயிகள் கடனாளிகளாக வாழும் நிலை மாற வேண்டும்” - இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் சீமான் முழக்கம்!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கல்வி, மருத்துவம், குடிநீர், போக்குவரத்து மற்றும் மின்சாரம் என அனைத்து அத்தியாவசியத் சேலைகளும் தொடர்ந்து தனியார் மயமாக்கப்பட்டு வருவதாகவும், அடிப்படைத் தேவைகளைத் தனியார் முதலாளிகள் வழங்குவார்கள் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் வேலை என்ன என்ற கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் தொடர்ந்து கடனாளிகளாகவே வாழும் அவல நிலை மாற வேண்டும் என்று குறிப்பிட்ட சீமான், பிற தொழில் செய்வோர் தங்கள் பொருட்களுக்கான விலையைத் தாங்களே தீர்மானிப்பது போல, விவசாயியும் தான் விளைவிக்கும் பொருட்களுக்குத் தானே விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
இதற்காக வேளாண்மைத் துறையின் கீழ் சிறப்பு அமைப்பு உருவாக்கப்படுவதோடு, விவசாயப் பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்க மாநிலம் முழுவதும் குளிரூட்டப்பட்ட நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மக்கள் கார், செல்போன் போன்ற வசதிகள் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் நீரும் உணவும் இன்றி வாழ முடியாது எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதுகாத்து நிர்வாக அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
