3000 கிலோ மல்லிக்கைப் பூக்களை ஆற்றில் கொட்டி விவசாயிகள் போராட்டம்... விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கண்ணீர்!

 
ஆற்றில் மல்லிப்பூ மல்லிகை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் மல்லிகைப் பூக்கள் முன்கூட்டியே மலர்ந்த நிலையில், சந்தைகளில் போதிய விலை கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் சுமார் 3 டன் மல்லிகைப் பூக்களைத் தென்பெண்ணை ஆற்றில் கொட்டி அழித்துள்ளனர்.

காவேரிப்பட்டணம், திம்மாபுரம், அவதானப்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. சமீபத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாகச் செடிகளிலேயே பூக்கள் முன்கூட்டியே விரிந்து மலர்ந்துவிட்டன. வெளிச்சந்தைகளில் மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்ததால், கிலோ ரூ. 1,000 வரை விற்பனையான பூக்களின் விலை அடிமட்ட அளவிற்குக் சரிந்தது. அறுவடை கூலி மற்றும் போக்குவரத்துச் செலவைக் கூட எடுக்க முடியாத நிலையில் வியாபாரிகள் பூக்களை வாங்க மறுத்துள்ளனர்.

புவிசார் குறியீட்டு சான்றிதழ்: மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி

சந்தையிலும் வாசனை திரவியத் தொழிற்சாலைகளிலும் பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உருவானதால், சுமார் 3 டன் வரையிலான மல்லிகைப் பூக்களை விவசாயிகள் வேறு வழியின்றித் தென்பெண்ணை ஆற்றில் கொட்டித் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இது போன்று மகசூல் அதிகமாகும் காலங்களில் ஏற்படும் பொருளாதார இழப்புகளைத் தடுக்கவும், பூக்களைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தவும் அரசு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு வாசனை திரவிய (சென்ட்) தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.